மூடுக

ஆன்மீக தலங்கள்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில்

பிள்ளையார்பட்டி

கற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும். இது காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. திருப்பத்தூா் – காரைக்குடி மாநில நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 71 கி.மீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த ஊா் பெயருக்கு (பிள்ளையார்பட்டி) காரணம் இங்கு அமைந்துள்ள கற்பகவிநாயகரே (பிள்ளையார்) ஆகும். இங்கு விநாயகப்பெருமான் பிற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இந்த கோவிலில் காணப்படும் 15-க்கும் மேற்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள் இக்கோவிலின் தொன்மையை பறை சாற்றுகிறது. ஆகஸ்ட் – செப்டம்பா் மாதத்தில் நடைபெறும் விநாயகா் சதுா்த்தி விழாவே இங்கு நடைபெறும் பிரதான திருவிழா ஆகும். விநாயகா் சதுா்த்தி விழா மிகுந்த கோலா கலத்துடன் 10 நாட்கள் நடைபெறும். மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுா்த்தியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு 3 லிங்கங்கள் – திருவீசா், மருதீசா் மற்றும் செஞ்சதீஸ்வரா், 3 பெண் தெய்வங்கள் – சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன் ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனா். இது வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பு அம்சமாகும். இங்கு தேவஸ்தான விடுதிகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
நேரம் : காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
தொலைபேசி : 04577 – 264182, 264797, 264240, 264241

பிரான்மலை சேக் ஒளியுள்ள தர்கா

தர்கா

பிரான்மலைசேக் ஒளியுள்ள தர்கா, மத முக்கியத்துவம் கொண்ட, முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாகும். இது, காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும், மத வேறுபாடுகளின்றி, அனைத்து மத சுற்றுலாப் பயணிகளும், இத்தர்காவிற்கு வருகின்றனர். இங்கு வந்து வழிபடுவோரின் பிரார்த்தனைகள் யாவும் கட்டாயம் மெய்ப்படும் என்று நம்பப்படுகிறது.இந்த தர்கா அனைவருக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமான மக்கள் நாள்தோறும் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். இங்கு வந்து பிரார்த்திப்போரின் அனைத்து வகையான ஆசைகளும் நிறைவேற்றப்படுவதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, நல்ல மண வாழ்க்கை, மற்றும் வாழ்வின் தீய சக்திகளை விரட்டியடித்தல், போன்ற எவ்வகை பிரார்த்தனைக்கும் பலன் உள்ளதாகக் கூறப்படுகிறது. பல்வேறு வகை நோய்களினால் அவதிப்படுவோர் இங்கு வந்து வழிபட்டால், அதிலிருந்து அவர்களுக்கு கட்டாயம் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தர்காவுக்குச் சென்றால், ஏராள்மானோர், இங்கு பிரார்த்தித்ததன் மூலம் நல்லதிர்ஷ்டமும், நல்ல உடல் நலமும் கிடைக்கப்பெற்ற உண்மைக் கதைகள் பலவற்றைக் கேட்டு அறியலாம்.

இடைக்காட்டூர் தேவாலயம்

இடைக்காட்டூர்

இடைகாட்டூர் சிவகங்கையின் ஒரு கிராமம் இந்த ஊர் மதுரைக்கு கிழக்கு பகுதியில் மதுரை – இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த ஊரில் அமைந்துள்ள புனித இருதய ஆலயம் கி.பி.1894ஆம் ஆண்டில் பிரெஞ்சு மதப் போதகர் பெர்டினாண்ட் செலி என்பவரால் கோதிக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டது. இது பிரான்சில் காணப்படும் ரீம்ஸ் தேவலாயத்தின் பிரதி ஆகும். இந்த தேவாலயம் தேவதூதர்களால் கட்டப்பட்டது என்று கூறப்படுவதால் போதகர் பெர்டினாண்ட் செலி, தேவாலயத்தின் உள்ளும் புறமும் 153 தேவ தூதர்களின் உருவங்களை வடிவமைத்து உள்ளார். இந்த தேவாலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் தேவாலயப் பீடத்தில் 40 புனிதர்களின் போதைனைகள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் 200 விதமாக வார்க்கப்பட்ட சுண்ணாம்பு கற்களால் ஆன செங்கல்கள் மற்றும் ஓடுகளால் கட்டப்பட்டது. தேவாலயத்தின் உட்புறம் அமைந்துள்ள பெரிய வளைவுகளை பெரிய உத்தரங்கள் தாங்குகின்றன. இதன் ஜன்னல்கள் பூ வேலைப்பாடு மிக்க செங்கற்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளால் இயேசு பெருமானின் சிலுவை பயணத்தைச் சித்தரிக்கிறது. தென் இந்தியா வெப்ப மண்டல நாடு என்பதால் வெற்று செங்கல்களின் பயன்பாடும் மேல் கூரையின் கீழாக இடைவெளி விட்டு கட்டப்பட்டுள்ள மற்றொரு கூரையின் பயனாகவும் தேவாலயத்தின் உட்பகுதியில் மிகவும் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. இங்கு இயேசு, அவரது வளர்ப்பு தந்தை யோசேப்பு, தாய் மேரி, பிற புனிதர்கள் மற்றும் தேவதூதர்களின் திரு உருவச்சிலைகள் பிரெஞ்சு நாட்டு கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குன்றக்குடி முருகன் கோவில்

குன்றக்குடி முருகன் கோவில்

குன்றம் என்றால் ”மலை” குடி என்றால் ”கிராமம்” – மலையின் மேல் அமைந்த கிராமம் என்பதால், இந்த ஊா் குன்றக்குடி என பெயா் பெற்றது. இங்கு எழுந்தருளியிருக்கும், முருகக்கடவுள் சண்முகநாதா் என்று அழைக்கப்படுகிறார். சண்முகநாதருக்கு ஆறுமுகமும், பன்னிரெண்டு கைகளும் உள்ளது. குன்றக்குடி, காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மலையின் மேற்குப்பகுதியில் மலையடிவாரத்தில், அகழ்ந்தெடுக்கப்பட்ட மூன்று பழங்காலக் குகை கோவில்கள் உள்ளன. பிற்க்காலத்தில் பல சிலைகள் இந்த கோவில்களில் நிறுவப்பட்டன. இந்த குகைக்கோவில்கள் அனைத்தும், சிவனுக்கு அா்ப்பணிக்கப்பட்டவை. இங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளா்களை கவரக்கூடிய பல கற்கால கல்வெட்டுகள் உள்ளன.

முக்கியத் திருவிழாக்கள்

தைப்பூசம் ஜனவரி – பிப்ரவரி, பங்குனி உத்திரம் மார்ச் – ஏப்ரல் வைகாசி விசாகம் மே, ஆடிக்கிருத்திகை ஜுலை – ஆகஸ்ட், கார்த்திகை மாதம் கந்த சஷ்டி, அக்டோபா் – நவம்பா். இந்த கோவில் ஆண்டு முழுவதும் பக்தா்களை ஈா்க்கிறது. ”தமிழ் புலவா் குன்றக்குடி அடிகளார்” இந்த ஊரில்தான் வாழ்ந்து, தமிலுக்கும் மதத்திற்கும், தொண்டாற்றினார். அவா் இங்குதான் சமாதி அடைந்தார். அருணகிரி நாதா் எழுதிய திருப்புகழில் குன்றக்குடி கோவிலை புகழ்ந்து பாடியுள்ளார். இந்த கோவிலில் சரவணப் பொய்கை, தேனாறு மற்றும் மயில் தீா்த்தம் ஆகிய பொய்கைகள் உள்ளன. முருகன், வள்ளி மற்றும் தெய்வானை இங்கு தனித்தனியாக மயில்களில் அமா்ந்து காட்சி தருவது, இந்தக்கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
நேரம் – காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி இரவு 8 மணி வரை.
தொலைபேசி – 91-4577-264227, 9790583820.
பேரூந்து – திருப்பத்தூா் – காரைக்குடி (குன்றக்குடி – 11 கி.மீ) மாநிலத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல பேரூந்து வசதி உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம் – காரைக்குடி

திருகோஷ்டியூர் கோவில்

திருகோஷ்டியூர் கோவில்

மிகப் பழமையான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணபெருமாள் கோவில் திருப்பத்தூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் திருப்பத்தூர் – சிவகங்கை சாலையில் அமைந்துள்ளது. இந்த வைணவ திருத்தலம் தென் இந்தியாவில் பத்ரிநாத் எனப்பெயர் பெற்றது. இது ஆழ்வார்கள் பாடிய பாடலில் விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகப் பாடப்பெற்றது. பெரியாழ்வார் பாடிய பெரியாழ்வார் திருமொழியில் திருக்கோஷ்டியூர் கிருஷ்ணர் பிறந்த இடமாக பாடப்பெற்றுள்ளது. இந்தக் கோவிலில் உள்ள அஷ்டங்க விமானம் 96 அடி உயரமானது. இந்தக் கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு மூலவர் நின்ற வண்ணமாக, அமர்ந்த நிலை மற்றும் சயன நிலை என மூன்று நிலைகளிலும் காணப்படுகிறார் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்று கூடி கோஷ்டியாக விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்ததை பற்றி முடிவு செய்த இடம் என்பதால் திருக்கோஷ்டியூர் எனப் பெயர் பெற்றது. இங்கு உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர் மற்றும் லஷ்மி நரசிம்மரையும் தரிசனம் செய்யலாம். கோவில் கோபுரம் 85 அடி உயரமுடையது.அதிலுள்ள தங்கக்கலசம் 5 அடி உயரமுடையது.

முக்கியத் திருவிழாக்கள்

மாசித் தெப்பத் திருவிழா (பிப்ரவரி – மார்ச்), வைகுண்ட ஏகாதசி (டிசம்பர் -ஜனவரி) புரட்டாசி நவராத்திரி (செப்டம்பர் – அக்டோபர்),
நேரம் – காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொலைபேசி எண்கள் – 04577 – 261122 / 261103,
பேருந்து வசதி குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் உள்ளது. காரைக்குடி மற்றும் மதுரை இரயில் நிலையம் அருகில் உள்ளது.

திருவேங்கடமுடையான் கோவில், தென் திருப்பதி, அரியக்குடி

தென் திருப்பதி

அரியக்குடியிலுள்ள தென் திருப்பதி, காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பிரபலமான தென்னிந்தியக் கோவிலாகும். இங்கு மூலவராக வெங்கடாச்சலபதி விளங்குவதால், இக்கோயில் மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. மூலக் கடவுள் “திருவேங்கடமுடையான்” என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறார். இக்கோவில் பாலாஜியின் பூலோக உறைவிடங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு வழிபடுதல், திருமலையில் வழிபடுவதற்கு சமமாகும் என்று மக்கள் நம்புவதால், இது தென் திருப்பதி அல்லது தெற்கின் திருப்பதி என்றே அழைக்கப்படுகிறது. தென் திருப்பதிக் கோவில், சிதைய ஆரம்பித்ததால், இது அண்மையில் மறுசீரமைப்புக்கு உள்ளானது. இதன் மூலத்தன்மையை, இம்மறுசீரமைப்பு கொஞ்சம் மாற்றியிருந்தாலும், இப்பணிகள், இக்கோவிலை வருங்கால சந்ததியினருக்கு, காப்பாற்றிக் கொடுத்ததினால் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இங்கு, வடக்குப் பகுதியில் உள்ள “கல்கருடன்” என்றழைக்கப்படும் கருடன் சிலை, அதன் மூல வடிவிலேயே உள்ளது. தினந்தோறும், ஒரு சிறப்பு பூஜை இக்கோயிலில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கென்றே, பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இக்கோவிலுக்கு வருகின்றனர்.

காளீஸ்வரர் (காளையார்) கோவில்

காளையார் கோவில்

சங்க காலத்தில் காளையார் கோவில் கானப்பேர் என்று அழைக்கப்பட்டது. இந்தக் கோவில் சொர்ண காளீஸ்வரா் கோவில் என்றும அழைக்கப்படுகிறது. இங்கு படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று செயலுக்குக்கும் மூன்று கோவில்கள் உள்ளது. பாண்டிய நாட்டின் 10வது தேவார ஸ்தலமாக இது கருதப்படுகிறது. காளையார் கோவில் சிவகங்கை மன்னா்களின் கோட்டையாக திகழ்ந்தது. இது தேவகோட்டை – மானாமதுரை சாலையில் சிவகங்கையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. காளீஸ்வரன் கோவில் காரணமாகவே இந்த ஊா் காளையாா் கோவில் எனப் பெயா் பெற்றது. 150 அடி உயரமுடைய ராஜ கோபுரமும், ஆனைமடு எனப் பெயா் பெற்ற தெப்பக்குளமும் இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும். மருது சகோதரா்கள் மூன்று போின் திருஉருவச்சிலைகள் இங்கு காணப்படுகிறது. அப்பா், சுந்தரா், ஞானசம்பந்தா் மற்றும் அருணகிரிநாதா் இந்த கோவிலுக்கு வந்து இறைவனை துதி பாடி உள்ளனா்.

முக்கியத் திருவிழாக்கள்

வைகாசி விசாகம் (மே – ஜுன்) மற்றும் தைப்பூசம் (ஜனவரி – பிப்ரவரி) ஆகியவை இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களாகும். திருவிழா நாட்கிளல் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இங்கு கூடுவார்கள். மருது சகோதரா்களின் சமாதி பழைய வாயிலின் எதிரு கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
நேரம் – அனைத்து நாட்களும் காலை 6 மணி முதல் மதியம் 12.00, மாலை 4 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
தொலைபேசி – 91-4575 – 235616, 9486212371.
பேரூந்து – காளையார் கோவிலிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல பேரூந்து வசதி உள்ளது.
இரயில் நிலையம் – சிவகங்கை

பட்டமங்கலம் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோவில்

பட்டமங்கலம்

இறைவன் பிருங்கி நந்தி தேவா் முதலான நால்வருக்கு சிவ கதையினை கூறிக்கொண்டிருந்தார். அச்சமயம் கார்த்திகை பெண்களான நிதர்த்தனி, அபரகேந்தி, டேகேந்தி, வர்த்தயேந்தி, அம்பா, துலா ஆகிய அறுவரும் இறைவன் முன் வீழ்ந்து வணங்கி எங்களுக்கும் அஷ்டமாசித்தியை உபதேசித்தருளும் என்று வேண்டினா். இறைவனுக்கு இதில் சற்று சஞ்சலம் தோன்றியது. அருகில் இருந்த உமையவள் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசிக்கும்படி சிவனிடம் சிபாரிசு செய்தார். உமையின் சிபாரிசை ஏற்று இறைவன் அஷ்டமாசித்தியை உபதேசிக்க துவங்கினார். ஆனால் கிடைத்த வாய்ப்பினை பெண்டிரோ சரிவர உபயோகிக்காமல் உமையவளையும் இறைவனையும் மறந்து கவனக்குறைவாக செவிமடுத்தனா்.
இதைக்கண்ட இறைவன் “நீங்கள் பட்டமங்கை எனும் தளத்தில் கற்பாறைகளாக கடவுது” என்று சாபமளித்தார். தங்கள் தவறை உணா்ந்த மங்கையா் தங்களுக்கு விதிக்கப்பட்ட சாபத்தை நீக்கும்படி வேண்டினா். இறைவன் அவா்களை மன்னித்தருளினார்.

“நீங்கள் கருங்கற்பாளைகளாய் பட்டமங்கை தளத்தில் ஆயிரம் ஆண்டுகள் கிடங்கள். அதன்பின் மதுரையிலிருந்து வந்து குருவடிவில் காட்சியளித்து உங்களுக்கு சாபவிமோசனம் அளிக்கிறேன்” என்றார். அவ்வாறே இறைவன் மதுரையிலிருந்து எழுந்தருளி கார்த்திகைப் பெண்களுக்கு சாபவிமோசனம் அளித்த தளமே பட்டமங்கை ஆகும். இது நாளடைவில் மருவி பட்டமங்கலம் என அழைக்கப்பட்டு வருகிறது.

காளி வடிவில் உமை: இறைவன் அஷ்டமாசித்தியை நங்கையருக்கு உபதேசிக்க யோசித்த போது அவா்களுக்கு பலமாக சிபாரிசு செய்ததற்காக உமையமையும் சபிக்கப்பட்டார். அவா் காளி கோலத்தில் நாவல் மரத்தடியில் நவையடிக்காளியாக அருள்பாலித்து வருகிறார்.

அருள்மிகு ஸ்வா்ண மூா்த்தீஸ்வரர் கோவில்,கண்டதேவி

கண்டதேவி

கண்டதேவி கிராமம் தேவகோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோவிலில் உள்ள சிவபெருமான் ஸ்வர்ண மூா்த்தீஸ்வரா் அல்லது சிறகிலிநாதன் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள அம்மன் பெரியநாயகி அம்மன். 350 ஆண்டு பழமையான இக்கோவில் சிவகங்கை தேவஸ்தானத்தலா் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோவில் சிவகங்கை மன்னரின் வாரிசுகளுக்குச் சொந்தமானது. இந்தக் கோவில் இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள இராவணனால் சீதை கடத்தப்பட்ட நிகழ்வோடு தொடா்புடையது. சீதையைக் காப்பாற்ற ஜடாயு போராடியபோது இராவணனால் சிறகு துண்டிக்கப்பட்டார். இராமனின் மடியில் உயிர் நீத்தார். அந்த இடத்தில் இராமா் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதற்கு சிறகிலிநாதா் எனப் பெயரிட்டார். இலங்கையில் சீதையைக் கண்ட அனுமன், இந்த இடத்தில் வைத்து தான் இராமனிடம் கண்டேன் தேவியை என்று கூறினார். கண்டேன் தேவியை என்பதே மறுவி பின்னாளில் கண்டதேவி எனப்பெயா் பெற்றது. இந்தக் கோவிலுக்குப் பின்னால் ஜடாயு தீா்த்ம் என்ற பெரிய குளம் உள்ளது. இந்த ஜடாயு தீா்ததம் வெயில் காலத்திலும் கடுமையான வறட்சியிலும் கூட வறண்டதில்லை என்று கூறப்படுகிறது. வருடந்தோறும் இந்தக் கோவிலில் ஆனி உற்சவம் ஜுன் மாத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தொலைபேசி – 91-9443956357
தேவகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பேரூந்து வசதி உள்ளது.
இரயில் நிலையம் – தேவகோட்டை (10 கி.மீ) மற்றும் காரைக்குடி (12 கி.மீ) 7.

வெட்டுடையார் காளியம்மன் கோவில், கொல்லங்குடி

கொல்லங்குடி

கொல்லங்குடி, சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலையில் மதுரை – தொண்டி சாலையில் அமைந்துள்ளது. கொல்லன் என்றால் உலோகங்களை வைத்து அணிகலன் மற்றும் பிற பொருட்களை வடிவமைப்பவர். குடி என்றால் கிராமம். மருது சகோதரர்களுக்கான போர் தளவாடங்கள் இங்கு தயாரிக்கப்பட்டதால் இந்த ஊர் கொல்லங்குடி எனப் பெயர் பெற்றது. இங்குள்ள புகழ் பெற்ற கோவில் வெட்டுடையார் காளி அம்மன் கோவில். இந்தக் கோவில் சிவகங்கைக்கு 13 கி.மீ. தொலைவில் தொண்டிக்கு செல்லும் வழியில் அரியாக்குறிச்சி என்ற ஊரில் அமைந்துள்ளது. கொல்லங்குயிலிருந்து 2 கி.மீ. தொலையில் உள்ளது அறியாக்குறிச்சி கோவிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார் பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி இடது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். கோவிலின் அடுத்த பகுதியில் அம்மனின் பல்வேறு செயல்களைக் குறிக்கும் வகையில் ஓவியங்கள் தீட்டபபட்டுள்ளன. இங்கு காளியின் சன்னதிக்கு எதிரில் ஆஞ்சநேயர், சோலைமலைச்சாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், விஷ்ணு, கருப்பசாமி, வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுக்காளி மற்றும் பைரவர் உள்ளனர்.
இந்தக் கோவிலில் பங்குனி மாதத்தில் (ஏப்ரல் – மே பிரம்மோத்சவம் 10 நாட்கள் நடைபெறும். பங்குனி சுவாதி பண்டிகை (மார்ச் – ஏப்ரல்), விநாயக சதுர்த்தி (ஆகஸ்ட் – செப்டம்பர்), ஆடிப்பெருக்கு (ஜூலை – ஆகஸ்ட்), நவராத்தி (செப்டம்பர் – அக்டோபர்), மார்கழி பூஜை (டிசம்பர் – ஜனவரி) மற்றும் பவுர்ணமி பூஜைகள் ஆகியவை நடைபெறும் கோவில் நேரம் – காலை 6.00 – மாலை 6.00
தொலைபேசி – 04575-232236, + 91-9047928314, 9363334311
இரயில் நிலையம் – சிவகங்கை (13 கி.மீ.)

கண்ணுடையநாயகி அம்மன் கோவில், நாட்டரசன்கோட்டை

நாட்டரசன்கோட்டை

கண்ணுடையநாயகி அம்மன் கோவில் மதுரை – தொண்டி சாலையில் சிவகங்கையில் இருந்து 9 கி.மீ. தொலைவில் நாட்டரசன்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 18 ஆம் நூற்றாண்டில் நாகரதர்களால் கட்டப்பட்டு இன்றளவும் அவர்களால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பிரதான தெய்வமான கண்ணத்தாள் என்னும் கண்ணுடைநாயகி அம்மன் கண் பார்வையற்றவர்களுக்கு பார்வையும் மற்றும் கண் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்த தெய்வமாகத் திகழ்கிறாள். கோவிலுக்கு முன்னால் ஒரு பெரிய குளம் உள்ளது. இந்தக் கோவிலின் தெய்வமான கண்ணாத்தாள சுயம்புமூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்குள்ள அம்மன் நின்ற நிலையில், 8 கைகளுடன், உடுக்கை மற்றும் சூலம் ஏந்தி, இடது காலின் அடியில் மகிஷன் என்னும் அசுரனை வதம் செய்வது போல காட்சி தருகிறாள். இந்தக் கோவில் அதன் கட்டிடக்கலைக்கும் கோவில் கோபுரத்தின் மேல் அமைந்துள்ள தங்கக் கலசங்களுக்கும் புகழ் பெற்றவை.
இங்கு வைகாசி விசாகம் 10 நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் களியாட்டத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி மாதத்தில் முழுக்களியாட்ட திருவிழாவும் புரட்டாசி மாதத்தில் நவரர்த்தியும் தை மாதத்தில் தைலக் காப்பு உற்சவமும் இங்கு கொண்டாடப்படும் பிற திருவிழாக்களாகும்.
கம்பராமணத்தை எழுதிய பிரபல புலவர் கம்பர் தன் வாழ்நாட்களின் கடைசிப் பகுதியை நாட்டரசன்கோட்டையில் தான் கழித்தார். அவரது சமாதி இங்கு காணப்படுகிறது. சிவகங்கையிலிருந்து நாட்டரசன்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது. இரயில் நிலையம் – சிவகங்கை.

அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில், மடப்புரம்

மடப்புரம்

மடப்புரம், மதுரையிலிந்து 18 கி.மீ. தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு அமைந்துள்ளது பத்திரகாளியம்மன் கோவில். 500 முதல் 1000 ஆண்டுகள் வரை மிகப்பழமையான இக்கோவிலின் மூல தெய்வம் பத்திரகாளி அம்மன் ஆகும். இந்தக் கோவிலின் ராஜகோபுரம் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. இந்கு ஏழுந்தருளியிருக்கும் பத்திரகாளியம்மன் நீதி தேவதையாகக் கருதப்படுகிறார். அநீதிகளை அழிக்கும் தேவதையாக தனது தலையில் சுடர் விடும் அக்கினியை கிரீடமாகக் கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் காட்சிதருகிறாள். இந்த காளி சிலை திறந்த வெளியில் ஒரு பீடத்தின் மேல் உள்ளது காளியைப் பாதுகாப்பது போன்ற தோற்றத்தில், காளியின் தலைக்கு மேலாக இரு கால்களையும் உயர்த்தியபடி கம்பீரத் தோற்றமுடைய குதிரை உள்ளது. 13 அடி உயரமுள்ள பத்திர காளியம்மனின் இரு புறமும் இரு பூதங்கள் பாதுகாவலுக்கு உள்ளன. பத்திரகாளியம்மன் கையில் திரிசூலம் ஏந்தியவாறு காட்சி தருகிறாள். இங்கு பக்தர்கள் அம்மனுக்கு 100 எலுமிச்சை, அம்மனை காத்து நிற்கும் கம்பீரமான குதிரைக்கு 1000 எலுமிச்சம் பழங்களால் ஆன மாலையும் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இந்தக் கோவிலின் காவல் தெய்வம் அய்யனார். மோசமான வானிலையில் காளிக்கு அடைக்கலம் கொடுத்து தன் குதிரைகளில் ஒன்றையும் அவளுக்குப் பாதுகாப்பாக அளித்தமையால், இந்த அய்யனார், அடைக்கலம் காத்த அய்யனார் எனப்பெயர் பெற்றவர். இந்த கோவிலின் ஸ்தல விருஷம் வேம்பு அல்லது வேப்பமரம். ஓவ்வொரு வெள்ளிக்கிழமையும் விக்ஷே நாளாகும். மாதத்தில் முதல் செவ்வாய் கிழமைகளில் 1008 விளக்குப் பூஜை, பாலாபிஷேகம் மற்றும் எலுமிச்சை விளக்கு ஏற்றுதல் விமரிசையாக நடைபெறும். நேரம் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
தொலைபேசி -04574 / 265305,
பத்திரகாளியம்மன் கோவில் மதுரைக்கு 18 கி.மீ. தொலையில், மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மதுரை பெரியார் பெருந்து நிலையத்திலிருந்து இக்கோவிலுக்குப் பேருந்து வசதி உள்ளது.
இரயில் நிலையம் – சிவகங்கை மற்றும் திருபுவனம்.

அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில், தாயமங்கலம்

தாயமங்கலம்

தாயமங்கலம் முத்து மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெயவம். தாயமங்கலம் முத்து மாரியம்மனிடம் வேண்டுவர்களின் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதாக நம்பப்படுகிறது. இந்தக் கோவிலும் இங்குள்ள கருங்கல்லால் செய்யப்பட்ட தெய்வமும் 1914 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. கோவிலின் அருகில் ஒரு பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. 300 வருடங்களுக்கு முன் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையாம்பதியில் முத்துச்செட்டியார் என்ற வணிகள் இருந்தார். ஒரு நாள் அவர் வணிகம் முடிந்து திரும்பும் வழியில் சின்னமனூரில் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தையில்லாத அவர், தன் குழந்தையாக அதை வளர்க்க எண்ணி அதைச் சுமந்து வரும் வழியில் ஆற்றில் குளிப்பதற்காக குழந்தையை விட்டு விட்டு ஆற்றில் இறங்கினார். திரும்பி வந்தபோது குழந்தையைக் காணவில்லை. கவலையுடன் வீடு திரும்பிய முத்துச்செட்டியாரின் கனவில் அந்தக் குழந்தை தோன்றி தனக்கு ஒரு கோவில் கட்டும்படி கூற, அந்த ஆற்று மணலில் ஒரு சிலை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் அந்த இடத்தில் அம்மனுக்கு கோவில் கட்டப்பட்டு முத்துச்செட்டியாரின் வாரிசுகள் பராமரித்து வருகின்றனர். பங்குனி மாதம் 15 ஆம் தேதி காப்புகட்டி திருவிழா ஆரம்பிக்கும். பங்குனி 19ல் பூக்குழி விழா நடைபெறும் 23ல் தேர், 24ல் பால்குட ஊர்வலம், 25ல் தீர்த்தவாரியுடன் இவ்விழா முடிவுபெறும் நவராத்திரி விழா அம்பிகைக்கு விக்ஷோாக நடக்கும். இந்நாட்களில் வரும் செவ்வாயன்று 108 பால்குட அபிக்ஷோமும், வெள்ளியன்று விளக்கு பூஜையும் நடக்கும். ஆடி, தை வெள்ளிக் கிழமைகளிலும் விக்ஷே பூஜை உண்டு நேரம் – காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை.
தாயமங்கலம் கோவில் சிவகங்கையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் மானாமதுரையிலிருந்து 22 கி.மீ. தொவிைலும் பரமக்குடியிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருவிழா நாட்களில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், காரைக்குடி சிறப்பு பேருந்துகளை இயக்கும் இரயில் நிலையங்கள் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை.