மூடுக

காணத்தக்க இடங்கள்

கானாடுகாத்தான்

கானாடுகாத்தான்

சர்வதேச கட்டட கலைக்கு இணையாக செட்டிநாட்டில் 7 ஆயிரம் பங்களாக்கள் உள்ளன. 80 முதல் 120 ஆண்டுகளை கடந்தும், புதுப்பொலிவுடன் செட்டிநாடு பங்களாக்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. செட்டிநாடு பகுதியில் உழைப்புக்கு முன்னோடியாக திகழும் நகரத்தார்கள் பல நாடுகள் கடந்து வியாபாரம் செய்தாலும், சொந்த ஊரில் அந்த நாடுகளின் கட்டட கலைகளை நுணுக்கமாக அறிந்து, சர்வதேச கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பினர். சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். இவை தான் பங்களா சுவற்றில் பளபளப்பையும், உறுதியையும் ஏற்படுத்தியுள்ளன. சிறிய பங்களா 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், அரண்மனை போன்ற பங்களா 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப் பட்டுள்ளது. மின்விசிறி இல்லாமலேயே இதமாக இருக்கும்.பங்களா முகப்பில் நுழைந்து பின் வாசல் வழியே வெளியேற அரை கி.மீ.,தூரம் நடக்கவேண்டும். பங்களாவின் நுழைவு வாயில் நிலைக்கதவு பர்மா தேக்குகளால் ஆனவை. தரையில் ‘டச்சு’நாட்டில் இருந்து வந்த பளிங்கு கற்கள், ஆத்தங்குடி டைல்ஸ் பதித்துள்ளனர். பங்களா உட்புறமேற்கூரை சந்திரவட்ட பிறை வடிவில் தேக்கு மரங்களால் ஆனது. இதில் உள்ள யாழி, யானை போன்ற சிற்பம் கண்ணிற்கு விருந்தளிக்கும். மேற்கூரை சுவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் போன்று பல ஆன்மிக சுற்றுலா தலங்களை சுட்டிக்காட்டும் ‘பச்சிலை ஓவியம்’ நகரத்தாரின் ஆன்மிக ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகின்றன. தரைதளத்தையொட்டி சுவற்றில் பொருத்தப்படும் ஜப்பான் ‘பூ’ கற்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. அறையின் மேற்கூரையில் உள்ள தேக்கு மரங்களை தாங்கி ‘பொருசு’ மர தூண்கள் நிற்பது கம்பீரம். பங்களா மேற்கூரையில் பொருத்தியுள்ள லண்டன் ஓடுகள் மூலம் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரையமாக்காமல் கிடாரத்தில்(ஆள்உயர அண்டா) சேகரித்து மழை நீர் சேகரிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துள்ளனர் நகரத்தார்.

செட்டிநாடு அரண்மனை

செட்டிநாடு அரண்மனை

காரைக்குடி, பள்ளத்தூா், ஆத்தங்குடி மற்றும் கோதமங்களம் பகுதிகளில் காணப்படும் செட்டிநாடு வீடுகள் மிகுந்த வேலைப்பாடு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட உயா் வகை மரங்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு பிரசித்தி பெற்றவை. காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள செட்டிநாடு அரண்மனை, இத்தகைய வேலைப்பாடுகளுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இவ்வரண்மனை, இந்தியன் வங்கி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நிறுவனரான டாக்டா்.அண்ணாமலை செட்டியார் அவா்களால் 1912-ல் கட்டப்பட்டது. வேலைப்பாடுகள் நிறைந்த இந்த அரண்மணையை கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகியது. இந்த அரண்மனை சிவகங்கைச்சீமையின் பாரம்பரிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது.

செட்டிநாடு அரண்மனையை கட்டப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பெரும்பாலும், கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அரண்மனையில் விலை உயா்ந்த தேக்கு, பளிங்கு அல்லது கிரானைட்டால் செய்யப்பட்ட பெரிய தூண்கள் நிறைந்த அகன்ட தாழ்வாரம் இருக்கிறது. இது இங்குள்ள அனைத்து பங்களாகளிலும், காணப்படும் பொதுவான அம்சமாகும். அதன் பின்னா் கல்யாணச்சடங்குகள் மற்றும் மத சடங்குகள் நடைபெறக் கூடிய விஸ்தாரமான முற்றம் உள்ளது. முற்றத்தின் ஒரு மூலையில் டாக்டா். அண்ணாமலை செட்டியாரின் மனைவி பல மணித்துளிகள் களித்த பூஜை அறை அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் அரச குடுபத்தினா் பயன்படுத்திய பல விலை உயா்ந்த பழமையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையில் 1990 ச.அடியில் 9 கார் நிறுத்தும் அறைகள் மற்றும் மின்தூக்கி (லிப்ட்) வசதி உள்ளது.
நேரம் – அனைத்து நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
தொலைபேசி – 0423-2533333
பேரூந்து – காரைக்குடியிலிருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல பேரூந்து வசதி உள்ளது.
இரயில் நிலையம் – காரைக்குடி.

ஆத்தங்குடி

ஆத்தங்குடி

ஆத்தங்குடி கிராமம்,தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி நகரிலிருந்து சுமார் 24 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. செட்டிநாடு பகுதியில் உள்ள இக்கிராமம், கையால் செய்யப்படும் செம்மண் ஓடுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது; ஏனெனில், இவ்வகை ஓடுகள் இங்கு மட்டுமே செய்யப்படுகின்றன.இவ்வோடுகள், சிமின்ட், மணல், ஸிந்தட்டிக் ஆஃஸைடுகள் மற்றும் பெல்லி ஜெல்லி ஆகியவற்றை உபயோகித்து செய்யப்படுகின்றன. இந்த ஓடுகள், முதலில் வடிவமைக்கப்பட்டு, வெயிலில் காய வைக்கப்பட்டு, பின் கண் கவர் கலை வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.இவ்வேலைப்பாடுகள் தான் இவ்வோடுகளுக்கு, அதன் தனிச்சிறப்பான கட்டமைப்பைக் கொடுக்கிறது. இவ்வேலைப்பாடுகளோடு, பல வித வண்ணங்களும் இவற்றின் அழகைக் கூட்ட உபயோகப்படுத்தப்படுகின்றன. மக்கள், அவர்கள் வீடுகள் மற்றும் புல்தரைகளுக்குத் தக்கவாறு, ஓடுகள் செய்யச் சொல்லியும் வாங்கிப் போகின்றனர். விலங்கினங்கள் மற்றும் செடிகள் வரையப்பட்டுள்ள, புல்தரைகளுக்காகவே பிரத்யேகமாக தயாராகும் ஓடுகள் மிகப் பிரபலமானவையாகும். நீங்கள் உங்கள் சுவர்களின் மற்றும் திண்டுகளின் வண்ணங்களுக்குப் பொருத்தமான வண்ணங்களிலும் இவ்வோடுகளைத் தேர்வு செய்யலாம். ஆத்தங்குடி மக்கள் தங்கள் வீடுகளை மேலும் அழகுபடுத்திக் காட்ட,இவ்வோடுகளை பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக, பரம்பரை பரம்பரையாக உபயோகிக்கப்பட்டு வரும் வீடுகளில் இவ்வகை ஓடுகளைக் காணலாம்.

ஆயிரம் ஜன்னல் வீடு

ஆயிரம் ஜன்னல் வீடு

ஆயிரம் ஜன்னல் வீடு, காரைக்குடியின் பிரபலமான அடையாளமாக விளங்குகிறது. இதன் பெயரை அப்படியே அர்த்தப்படுத்திப் பார்த்தால், “ஆயிரம் ஜன்னல்களை உடைய வீடு” என்ற அர்த்தத்தில் வரும். இவ்வீடு, காரைக்குடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே, இதனை குறிப்பாகப் பார்க்க விரும்பும் அளவுக்கு மிகவும் பிரபலமாக உள்ளது.சுமார் 20,000 சதுர அடியில் மிக விசாலமாக அமைந்துள்ள இவ்வீடு,1941-ம் வருடம், சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் மிக அதிகத் தொகையாக தோன்றிய இது, தற்போது சாதாரணமாகத் தோன்றுகிறது. இவ்வீட்டில், 25 பெரிய அறைகளும், ஐந்து பெரிய கூடங்களும் உள்ளன. மேலும், சுமார் 20 கதவுகளும், 100 ஜன்ன்ல்களும் உள்ளன. முதன்முறையாக, இவ்வீட்டில் நுழையும் யார்க்கும், என்ன தான் அது சிதைவுக்குள்ளாகி இருந்தாலும், மோசமாக பராமரிக்கப்பட்டிருந்தாலும், அதன் அசல் கட்டுமானக் கலையழகும், பிரம்மாண்டமும் தான் முதலில் கண்ணைக் கவர்ந்து பிரம்மிக்க வைக்கும்.


கண்ணதாசன் நினைவகம்

கண்ணதாசன் நினைவகம்

இச்சிறு மண்டபம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த தமிழ்க் கவிஞர் கவியரசர் கண்ணதாசனுக்காகக் கட்டப்பட்ட்தாகும். கண்ணதாசன் அவர்கள், தன் புரட்சிக் கருத்துக்களால், தமிழ் இலக்கியத்தின் முகத்தை மற்றியமைத்தவர் என்ற புகழுக்குரியவர். இவருக்கு மக்களை கட்டிப்போட்டு வைக்கக் கூடிய சிறப்பான பேச்சாற்றலும் இருந்த்து. தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்லாது, தமிழ் திரையுலகுக்கும், மிகப் பிரபலமான பல பாடல்களைத் தந்து பங்காற்றியுள்ளார். பல பத்திரிக்கைகளிலும், இவரது அரசியல் கட்டுரைகள் பலவும் வெளிவந்துள்ளன. இவரது எழுத்துக்கள் தமிழ்நாட்டில் தனி முத்திரை பதித்தன; ஏனெனில், அதுவரை தமிழர்கள் எதற்கும் குரல் கொடுக்க முன்வராத நிலையை இவர் எழுத்துக்கள் தகர்த்தெறிந்து, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவனவாக இருந்தன. அவர் தன் படைப்புகளில், பொதுமக்களின் பிரச்சினைகள், பயங்கள் மற்றும் சந்தோஷங்களைப் பற்றியே பெரும்பாலும் எழுதினார்.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

வேட்டங்குடி

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் மதுரையிலிருந்து 51 கி.மீ தொலைவில் மதுரை – மேலூா் – திருப்பத்தூா் சாலையில் அமைந்துள்ளது. இது சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூா் தாலுக்காவிலுள்ள வேட்டங்குடிப்பட்டி மற்றும் பெரிய கொள்ளுக்குடிப்பட்டியில் அமைந்துள்ளது. இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் 40 ஹெக்டோ் பரப்பளவில் வேட்டங்குடி, பெரிய கொள்ளுக்குடி மற்றும் சின்ன கொள்ளுக்குடி என்ற ஊா்கிளன் நீா்நிலைகளை உள்ளடங்கியது. இந்த சரணாலயம் குளிர் காலங்களில் இடம் பெயரும் பறவைகளுக்கான இயற்கை வாழ்விடமாகும். உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சமா்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற சுமார் 217 வகையான 8000 வெளிநாட்டுப் பறவைகள் மழைக்காலத்தில் இங்கு அடைகாத்தலுக்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக உள்ளது. இந்தச் சரணாலயம் செல்வதற்கு உகந்த காலம் நவம்பா் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலம். அப்பொழுது நிலவும் இதமான தட்ப வெப்ப நிலை ஆயிரக்கணக்கான பறவைகளை அங்கு ஈா்க்கிறது. தங்குமிட வசதி காரைக்குடி, திருப்பத்தூா் மற்றும் மதுரையிலுள்ளது. அருகிலுள்ள ஊா்கள் காரைக்குடி மற்றும் மதுரை ஆகும். அங்கிருந்து வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு பேரூந்து வசதி உண்டு.

தொடா்புக்கு அணுகவும்,
வனவிலங்கு காப்பாளா்,
உயிர்க்கோள பாதுகாப்பு மையம் (பையோஸ்பியா் ரிசா்வ்) மண்டபம்,
இராமநாதபுரம்.
தொலைபேசி – 04567 – 230079.